Flash News

Flash News அன்பார்ந்த ஆசிரிய பெருமக்களே! இந்த வலை தளத்தில் தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு தேவையான அடிப்படை கணித செயல்பாடுகளுக்கான விளையாட்டுகள் மற்றும் ஆங்கில விளையாட்டுகள் தரப் பட்டுள்ளன. அவற்றைக் கண்டு பள்ளிகளில் செயல்படுத்துமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்...01.07.2014 முதல் அகவிலைப்படி 7% உயருகிறது. ...

Thursday 25 September 2014

29 மாவட்டங்களில் உள்ள 100 பள்ளிகளை தரம் உயர்த்திய பள்ளிகளின் அரசாணை- 148 -நாள் 22.09.2014 100 பள்ளிகளின் பட்டியல்

அரசு பள்ளிகளில் கனெக்டிங் கிளாஸ் ரூம் திட்டம் - மாணவர்கள் அதிக ஆர்வம்

கற்றல் முறையை நவீனப்படுத்தி, அனைத்து அரசு பள்ளிகளின் வகுப்பறைகளை ஒருங்கிணைக்கும் விதமாக, கனெக்டிங் கிளாஸ் ரூம் திட்டம், நடப்பாண்டு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இணையவழி பயிற்சியின் வாயிலாக, ஆசிரியர் விடுப்பு எடுக்கும்போது கூட, வகுப்புகள் நடப்பதால், மாணவர்கள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர்.
அரசு பள்ளிகளின் கல்வித்தரத்தை, தொழில்நுட்ப முயற்சிகள் வாயிலாக மேம்படுத்த, பள்ளிக் கல்வித்துறை சார்பில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலை நாடுகளின் வகுப்புகளைபோல், அரசு பள்ளி வகுப்புகளிலும், மாற்றத்தை கொண்டுவர, கனெக்டிங் கிளாஸ் ரூம் திட்டம், நடப்பாண்டு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இத்திட்டமானது முதற்கட்டமாக, மாவட்டத்திற்கு ஐந்து பள்ளிகள் வீதம் தேர்வு செய்யப்பட்டு, வகுப்பறை நிகழ்வுகள் திட்டமிடப்பட்டுள்ளன.
கோவை மாவட்டத்தை பொறுத்தவரை, ராஜவீதி, கணுவாய், கவுண்டம்பாளையம், கணபதி அரசு மேல்நிலைப்பள்ளிகள் மற்றும் பொள்ளாச்சி நகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி என, ஐந்து இடங்களில், செயல்பட்டு வருகிறது. இணையதள வசதி மூலம், புராஜக்டர் மற்றும் ஆடியோ சிஸ்டம் கொண்டு, ஒரு வகுப்பறையில் நடத்தும் பாடத்தை, அனைத்து பள்ளிகளிலும், அதே பிரிவை சேர்ந்த மாணவர்கள் கவனிக்கவும், விவாதம் நடத்தவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
இதன் வாயிலாக, குறிப்பிட்ட ஐந்து பள்ளிகளில், முக்கிய பகுதிகளை செய்முறை மற்றும் விளக்கங்களுடன் நடத்த வேண்டியிருந்தாலும், ஆசிரியர்கள் விடுப்பானாலும் வழக்கம்போல் வகுப்புகள் நடக்கும்.
இதற்கு, நோடல் மையமாக, ராஜவீதி துணி வணிகர் மேல்நிலைப்பள்ளி தேர்வு செய்யப்பட்டுள்ளது. தற்போது ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும், ஆங்கிலம், கணிதம், அறிவியல் உள்ளிட்ட பாடங்கள் நடத்தப்படுகின்றன. இதை மற்ற வகுப்புகளுக்கும் விஸ்தரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து, கோவை, ராஜவீதி துணி வணிகர் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்கள் கூறுகையில், "இணையவழி கற்றல் முறையினாலும், புதிய ஆசிரியர்கள், வகுப்பறை மாற்றம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களாலும், மாணவர்கள் அதிக ஆர்வத்துடன் பாடங்களை கவனிக்கின்றனர். நோடல் மைய பள்ளியில் இருந்து, ஆசிரியர்கள் வாயிலாக நடத்தப்படும் பாடத்தை, மற்ற பள்ளி மாணவர்கள் கவனிக்க முடிவதோடு, புரியாத பகுதிகள் குறித்து கேள்விகள் எழுப்பலாம்.
இதற்கு, மற்ற நான்கு பள்ளி மாணவர்களும், வெப் கேமரா முன்னிலையில், V எழுத்து வடிவத்தில் அமர்ந்திருக்க வேண்டும். ஒரே சமயத்தில், குறிப்பிட்ட பள்ளிகளில் இருந்து, குறிப்பிட்ட எண்ணிக்கையிலான மாணவர்கள் வரை, விவாதத்தில் பங்கேற்கலாம்; மற்ற மாணவர்கள் அதை கவனிக்க முடியும். இப்புது முயற்சியால், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் என இரு தரப்பினருக்கும், புதுவிதமான கற்றல் அனுபவம் கிடைக்கிறது," என்றனர்.

பிளஸ் 2 பொதுத்தேர்வில் 100 சதவீத தேர்ச்சி இலக்கு

பிளஸ் 2 பொதுத்தேர்வில் தேர்ச்சி விகிதத்தை 100 சதவீதமாக அதிகரிக்க மாநகராட்சியின் ‘உண்டு–உறைவிட’ பள்ளிக்கூட மாணவர்களுக்கு தினமும் 2 வேளை பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகிறது.
‘உண்டு–உறைவிட’ பள்ளி
சென்னை மாநகராட்சியின் கட்டுப்பாட்டில் 32 மேல்நிலைப் பள்ளிகள் உள்ளன. இந்த பள்ளிகளில் ஆயிரக்கணக்கான மாணவ–மாணவிகள் கல்வி பயின்று வருகின்றார்கள். மாநகராட்சி பள்ளிகளில் கடந்த சில ஆண்டுகளாக தேர்ச்சி பெறும் மாணவ–மாணவிகளின் விழுக்காடு கணிசமாக அதிகரித்து வருகிறது.
தேர்ச்சி விகிதத்தை மேலும் அதிகரிக்கும் வகையிலும், பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 தேர்வுகளில் படிப்பு ஊக்க திறனை மேம்படுத்தும் வகையிலும் செனாய் நகர் சுப்பராயன் தெருவில் உள்ள ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் சைதாப்பேட்டையில் உள்ள பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஆகியவை ‘உண்டு–உறைவிட’ பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டன.
மாணவ–மாணவிகள் ஆர்வம்
வீடுகளில் குறைவான இடவசதி, படிப்பதற்கு போதிய வசதி, வாய்ப்புகள் இன்மை, குடும்ப சூழ்நிலை, பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள், தொந்தரவு காரணமாக வீடுகளில் தங்கியிருந்து படிப்பதை சுமையாக கருதும் மாணவ–மாணவிகள் பயன் அடைவதற்காக இப்பள்ளிகளை மாநகராட்சி முதல் முறையாக தொடங்கியுள்ளது.
‘உண்டு–உறைவிட’ பள்ளிகளில் மாணவ–மாணவிகளுக்கு சாப்பாடு, படுக்கை இடவசதி, படிப்பதற்கு மின் விளக்குகள், தங்கும் இடத்தில் கட்டில், மின்விசிறி உள்ளிட்ட படிப்பதற்கு உகந்த பல்வேறு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளது. இதனால் மாணவ–மாணவிகள் ஆர்வத்துடன் படிப்பினை தொடர்ந்து வருகிறார்கள்.
பிளஸ் 2 பயிற்சி வகுப்பு
இதுகுறித்து மாநகராட்சி உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:–
‘உண்டு–உறைவிட’ பள்ளிகளில் பிளஸ் 1 மாணவ–மாணவிகள் 106 பேர் சேர்ந்துள்ளனர். இவர்களுக்கு வழக்கமான பள்ளி நேரத்தில் பிளஸ் 1 பாடமும், காலை மற்றும் மாலை நேரத்தில் பிளஸ் 2 பாட வகுப்புகளும் நடத்தப்பட்டு வருகிறது. இதனால் அவர்கள் அடுத்த ஆண்டு நடைபெறும் பிளஸ் 2 தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்று 100 சதவீத தேர்ச்சி பெறுவார்கள்.
‘உண்டு–உறைவிட’ பள்ளிகளுக்கு மாணவ–மாணவிகள் இடையே நல்ல வரவேற்பு உள்ளது. அடுத்த கல்வி ஆண்டு முதல் 6–ம் வகுப்பு முதல் 12–ம் வகுப்பு வரை உள்ள அனைத்து பள்ளிகளிலும் இந்த வசதி, வாய்ப்புகள் ஏற்படுத்தப்படும். இதனால் மாநகராட்சி பள்ளிகளில் படிக்கும் மாணவ–மாணவிகளின் கல்வித்தரம் மேம்படும்.
எல்.கே.ஜி.–யூ.கே.ஜி.
இதேபோன்று மாநகராட்சி கட்டுப்பாட்டில் 65 எல்.கே.ஜி. மற்றும் யூ.கே.ஜி. பள்ளிகள் உள்ளன. இந்த பள்ளிகளில் 5 ஆயிரம் சிறுவர், சிறுமியர் சேர்ந்துள்ளனர். இவர்களுக்கான வகுப்புகள் அடுத்த மாதம் 6–ந் தேதி தொடங்குகிறது. எல்.கே.ஜி. மற்றும் யூ.கே.ஜி. வகுப்புகளில் சேரும் சிறுவர், சிறுமியருக்கு 3 ஜோடி இலவச சீருடை மற்றும் ஒரு ஜோடி ‘ஷூ’, ‘ஷாக்ஸ்’ ஆகியவை கல்வித்துறை சார்பில் வழங்கப்பட உள்ளது.

இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்கள் பணி நியமனத்துக்கு தடை நீக்கப்பட்டுள்ளதால் ஏற்கனவே தேர்ந்து எடுக்கப்பட்டவர்கள் விரைவில் பணியில் சேர உள்ளனர் - தினத்தந்தி

இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் பணி நியமனத்துக்கு விதிக்கப்பட்டு இருந்த தடையை நீக்கி மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
பணி நியமனத்துக்கு தடை
இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் பணி நியமனத்துக்கு ‘வெயிட்டேஜ்’ மதிப்பெண் வழங்கும் நடைமுறையை ரத்து செய்ய வேண்டும் என்றும், தகுதித்தேர்வில் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் பணி நியமனம் மேற்கொள்ள உத்தரவிட வேண்டும் என்றும் மதுரை சொக்கிகுளத்தை சேர்ந்த ஜெயகிருஷ்ணா உள்பட 18 பேர் மதுரை ஐகோர்ட்டு கிளையில் மனு தாக்கல் செய்தனர்.
மனுவை விசாரித்த தனி நீதிபதி, பட்டதாரி, இடைநிலை ஆசிரியர் பணி நியமனங்களுக்கு தடை விதித்து உத்தரவிட்டார்.
அப்பீல்
இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசின் பள்ளி கல்வித்துறை செயலாளர், மதுரை ஐகோர்ட்டு கிளையில் அப்பீல் செய்தார். இந்த அப்பீல் மனு நீதிபதிகள் எம்.ஜெயச்சந்திரன், ஆர்.மகாதேவன் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. தமிழக அரசு சார்பில் ஆஜரான அட்வகேட் ஜெனரல் சோமையாஜி, மதுரை ஐகோர்ட்டு கிளை சிறப்பு அரசு வக்கீல் சண்முகநாதன் ஆகியோர் கூறியதாவது:-
‘ஆசிரியர் பணி நியமனத்துக்கு ‘வெயிட்டேஜ்’ மதிப்பெண்ணை கணக்கில் எடுத்துக்கொள்ளும் நடைமுறை சரியானது அல்ல என்று கூறி பட்டதாரி, இடைநிலை ஆசிரியர் பணி நியமனத்துக்கு தனி நீதிபதி தடை விதித்தார். ஆசிரியர் பணிக்கு ‘வெயிட்டேஜ்’ மதிப்பெண்ணை கணக்கில் எடுத்துக்கொள்ளும் நடைமுறை சரியானது தான் என்று சென்னை ஐகோர்ட்டு டிவிஷன் பெஞ்சு உத்தரவிட்டுள்ளது. இதுபோன்ற சூழ்நிலையில் ஆசிரியர் பணி நியமனத்துக்கு தனி நீதிபதி பிறப்பித்துள்ள தடை ஏற்புடையது அல்ல. எனவே, அந்த தடையை நீக்க வேண்டும்.’
இவ்வாறு அரசு வக்கீல்கள் கூறினர்.
தடை நீக்கம்
மேலும், சென்னை ஐகோர்ட்டு டிவிஷன் பெஞ்சு பிறப்பித்த உத்தரவு நகலையும் அவர்கள் நீதிபதிகளிடம் கொடுத்தனர். இதைத்தொடர்ந்து, பட்டதாரி, இடைநிலை ஆசிரியர் பணி நியமனங்களுக்கு தனி நீதிபதி விதித்த தடையை நீக்கி நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
தகுதித்தேர்வில் பெற்ற மதிப்பெண், வெயிட்டேஜ் மதிப்பெண் அடிப்படையில் இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் பணிக்கு ‘கவுன்சிலிங்’ நடத்தப்பட்டு பலருக்கு பணி நியமன உத்தரவு வழங்கப்பட்டது. அந்த சமயத்தில் பணி நியமனத்துக்கு ஐகோர்ட்டு இடைக்கால தடை விதித்ததால் ‘கவுன்சிலிங்’ மூலம் பணி நியமன உத்தரவு பெற்றவர்கள் பணியில் சேர முடியாமல் இருந்தனர். தற்போது அந்த தடை நீக்கப்பட்டுள்ளதால் ஏற்கனவே தேர்ந்து எடுக்கப்பட்டவர்கள் விரைவில் பணியில் சேர உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆசிரியர்கள் நியமனத்தில் தகுதிகாண் முறைக்கு தடை நீக்கம்

ஆசிரியர்கள் நியமனத்தில் தகுதிகாண் மதிப்பெண் முறைக்கு, தனி நீதிபதி பிறப்பித்த இடைக்காலத் தடையை உயர் நீதிமன்ற அமர்வு புதன்கிழமை நீக்கியது. தமிழகத்தில் இடை நிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் நியமனத்தில் தகுதிகாண் முறையில் மதிப்பெண்கள் வழங்குவதை எதிர்த்து பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 14 பேர் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுக்களைத் தாக்கல் செய்திருந்தனர்.
இந்த மனுக்களை விசாரித்த தனி நீதிபதி, தகுதிகாண் முறைக்கு இடைக்காலத் தடை விதித்து கடந்த செப்.4-இல் உத்தரவிட்டார். இந்தத் தடையை நீக்கக் கோரி அரசு சார்பில் பள்ளிக் கல்வித் துறை செயலர் மேல்முறையீடு மனு தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதிகள் எம்.ஜெயச்சந்திரன், ஆர்.மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் புதன்கிழமை விசாரிக்கப்பட்டது.
அப்போது அரசு தலைமை வழக்குரைஞர் சோமையாஜி ஆஜராகி, தகுதிகாண் முறை சரியானதல்ல என தனி நீதிபதி உத்தரவிட்டுள்ளார். ஆனால், சென்னை உயர் நீதிமன்ற அமர்வு தகுதிகாண் முறை சரியானதுதான் என உத்தரவிட்டுள்ளது.
எனவே, தனி நீதிபதியின் உத்தரவு செல்லுபடியாகும் தன்மை குறித்த கேள்வி எழுவதால், தடையை நீக்கி உத்தரவிட வேண்டும் என வாதிட்டார்.
இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், தனி நீதிபதி பிறப்பித்த இடைக்காலத் தடையை நீக்கி உத்தரவிட்டனர்.

வருங்கால வைப்பு நிதி (PF) சந்தாதாரர்கள் வங்கிக் கணக்கு அளிப்பது கட்டாயம்

வருங்கால வைப்பு நிதி சந்தாதாரர்கள் நிரந்தரப் பொதுக் கணக்கு எண்ணைப் பெற வங்கிக் கணக்கு எண் அளிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சென்னை மண்டலத் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி ஆணையர் நிலிண்டு மிஸ்ரா வெளியிட்டுள்ள செய்தி:
வருங்கால வைப்பு நிதி (பி.எஃப்) சந்தாரர்கள் நிரந்தரப் பொதுக் கணக்கு எண்ணைப் பெற வங்கி கணக்கு எண்ணை, "ஐஎஃப்எஸ்சி' குறியீட்டுடன் அளிக்க வேண்டும்.
தற்போதைய சந்தாதாரர்களின் வங்கிக் கணக்கு எண் குறித்த விவரங்களை அக்டோபர் 15-ஆம் தேதிக்கு முன்பும், முந்தைய சந்தாதாரர்களின் விவரங்களை அக்டோபர் 31-ஆம் தேதிக்கு முன்னரும் தொழில் நிறுவனங்கள் சமர்ப்பிக்க வேண்டும்.
இதுவரை வருங்கால வைப்பு நிதி சந்தாதாரர்கள் 1.80 கோடி பேரிடம் வங்கிக் கணக்கு எண்களும், நிரந்தரக் கணக்கு எண் (பான் கார்டு) குறித்த விவரங்கள் 86.9 லட்சம் பேரிடமும், ஆதார் அடையாள அட்டை எண் குறித்த விவரங்கள் 28 லட்சம் பேரிடமும் இருந்து பெறப்பட்டுள்ளன என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

100 அரசு உயர்நிலைப் பள்ளிகள் மேல்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்வு

2014-15 ஆம் கல்வியாண்டில் 100 அரசு உயர்நிலைப் பள்ளிகளை, மேல்நிலைப் பள்ளிகளாகத் தரம் உயர்த்தி பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. வேலூர் மாவட்டத்தில் அதிகபட்சமாக 11 உயர்நிலைப் பள்ளிகள், மேல்நிலைப் பள்ளிகளாகத் தரம் உயர்த்தப்பட்டுள்ளன. அதற்கு அடுத்து திருவள்ளூர், விழுப்புரம் மாவட்டங்களில் 8 உயர்நிலைப் பள்ளிகள் தரம் உயர்த்தப்பட்டுள்ளன.
மாவட்ட வாரியாக தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளின் எண்ணிக்கை விவரம்:
அரியலூர் -3, கோவை-2, கடலூர்-2, தருமபுரி -3, திண்டுக்கல்-2, ஈரோடு-2, காஞ்சிபுரம் - 6, கன்னியாகுமரி-1, கரூர்-2, கிருஷ்ணகிரி -4, மதுரை -3, நாகப்பட்டினம்-2, நாமக்கல்-2, பெரம்பலூர்-2, புதுக்கோட்டை -5, ராமநாதபுரம்-3, சேலம்-4, சிவகங்கை-3, தஞ்சாவூர்-2, தேனி-2, திருவண்ணாமலை-6, திருநெல்வேலி-2, திருப்பூர்-1, திருவள்ளூர்-8, திருவாரூ-1, திருச்சி-2, தூத்துக்குடி-2, வேலூர்-11, விழுப்புரம்- 8, விருதுநகர் -4.
வரவேற்பு: உயர்நிலைப் பள்ளிகளை மேல்நிலைப் பள்ளிகளாகத் தரம் உயர்த்தும் அறிவிப்பை தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகள் சங்கம் வரவேற்றுள்ளது.
அதேநேரத்தில், ஏற்கெனவே அறிவித்தவாறு 50 நடுநிலைப் பள்ளிகளை உயர்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தும் அறிவிப்பை விரைவில் வெளியிட வேண்டும் என்று அந்தச் சங்கத்தின் மாநிலப் பொதுச் செயலாளர் சாமி.சத்தியமூர்த்தி வலியுறுத்தியுள்ளார்.

அமைச்சர், எம்எல்ஏக்கள் பரிந்துரைத்த பள்ளிக் காவலர்கள் பணி நியமனம் ரத்து

அமைச்சர், எம்எல்ஏ-க்களின் பரிந்துரை மீதான 6 பள்ளிக் காவலர்கள் நியமனத்தை சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை ரத்து செய்தது. மேலும், லஞ்ச ஒழிப்பு காவல் துறைக் கண்காணிப்பாளர் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது.
மதுரை மாவட்டத்தில் 2012-ஆம் ஆண்டு பள்ளிக் காவலர்கள் மற்றும் துப்புரவு ஊழியர்களை நியமித்ததில் நடைபெற்ற முறைகேடுகள் குறித்து சிபிஐ விசாரிக்கக் கோரும் மனுவை நீதிபதி எஸ்.நாகமுத்து விசாரித்து வந்தார்.
இந்த வழக்கில், தொழில் துறை முதன்மை செயலர் சி.வி.சங்கர் விசாரணை நடத்த கடந்த ஆண்டு உத்தரவிடப்பட்டது. அவர், அண்மையில் விசாரணை அறிக்கையைத் தாக்கல் செய்தார். அதில், பணிகளுக்கு பரிந்துரை அளிக்கப்பட்டிருந்த போதும், தகுதி அடிப்படையில் தான் நியமனங்கள் நடைபெற்றுள்ளன எனக் குறிப்பிட்டிருந்தார்.
இந்த அறிக்கையில் பல்வேறு சந்தேகங்களை எழுப்பிய நீதிபதி, அரசியல்வாதிகள் கடிதம் அளித்தது, பள்ளிக்கல்வித் துறை இயக்குநரகத்தில் இருந்து வந்த தொலைபேசி அழைப்பு ஆகியவை குறித்து விசாரிக்காதது ஏன்? என கேள்வி எழுப்பினார்.
இந்த சந்தேகங்கள் குறித்து பதிலளிப்பதற்காக நேரில் ஆஜராகும்படி சி.வி.சங்கருக்கு நீதிபதி உத்தரவிட்டார்.
அதன்படி, உயர் நீதிமன்றத்தில் சி.வி.சங்கர் புதன்கிழமை ஆஜரானார். அவரிடம் நீதிபதி, பரிந்துரை செய்ததாகக் கூறப்படும் அரசியல்வாதிகளிடம் விசாரணை நடத்தாதது ஏன் எனக் கேட்டார்.
இதற்கு சிவி.சங்கர், பொதுவாக அரசுப் பணிகளுக்கு அரசியல்வாதிகள் பரிந்துரை கொடுப்பது வழக்கமாக உள்ளது. எனவே, அதில் விசாரிக்க வேண்டியதில்லை என கருதியதாகத் தெரிவித்தார். இந்தப் பதிலில் நீதிபதி திருப்தி அடையவில்லை. அரசு தலைமை வழக்குரைஞர் சோமையாஜி ஆஜராகி, அறிக்கையில் திருப்தி இல்லை என்றால், வேறு ஓர் அதிகாரி விசாரிக்க உத்தரவிட்டால் ஏற்பதாகத் தெரிவித்தார். இதைத் தொடர்ந்து நீதிபதி எஸ்.நாகமுத்து பிறப்பித்த உத்தரவு:
இந்த வழக்கில் விசாரணை அதிகாரியை அரசு தான் நியமித்தது. ஆனால், அவர் தாக்கல் செய்த அறிக்கை திருப்திகரமாக இல்லை.
அரசியல்வாதிகள் தொடர்பு, இயக்குநரகத்தில் இருந்துவந்த தொலைபேசி அழைப்பு போன்றவை குறித்தும் அவர் விசாரிக்கவில்லை. எனவே, எம்.எல்.ஏ.க்கள், அமைச்சர் போன்றோர் பரிந்துரை அடிப்படையிலான 6 பள்ளிக் காவலர்கள் நியமனம் ரத்து செய்யப்படுகிறது.
இந்தப் பணியிடங்களை புதிதாகத் தேர்வு நடத்தி நிரப்ப வேண்டும். மேலும், இந்த விவகாரம் குறித்து தென் மண்டல லஞ்ச ஒழிப்புப் பிரிவு கண்காணிப்பாளர் சேவியர் தனராஜ் விசாரிக்க வேண்டும்.
அவர் 6 மாதங்களுக்குள் விசாரணையை முடித்து அரசிடம் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். மேலும், சம்பந்தப்பட்டவர்கள் மீது குற்ற நடவடிக்கை எடுக்கத் தடையில்லை. மனு முடித்து வைக்கப்படுகிறது என உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.
"பரிந்துரைக் கடித முறையை ஒழிக்க யோசனை'
நீதிபதி உத்தரவில், நாட்டில் ஏராளமான ஏழ்மை நிலையில் உள்ள இளைஞர்கள் சாதாரண அரசுப் பணிகளை நாடுகின்றனர். அரசியலமைப்பு சட்டப்படி சம வாய்ப்பு கிடைக்கும் என நம்புகின்றனர்.
ஆனால், அந்தப் பணிகளும் பரிந்துரை செய்யப்படுவோருக்கு ஒதுக்கப்படும்போது இளைஞர்களின் கனவு தகர்கிறது. பணிக்கு பரிந்துரைக் கடிதம் கொடுப்பதும் லஞ்சம் கொடுப்பதற்கு சமமானதுதான். மக்களின் தேவைக்காக பள்ளிகள், பாலங்கள், குடிநீர் வசதி போன்ற பணிகளை செய்ய வேண்டும் என பரிந்துரை கொடுப்பதில் தவறில்லை. ஆனால், அரசு வேலைக்கு பரிந்துரை செய்வது கூடவே கூடாது.
இந்த முறையை ஒழிக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார். கூட்டுறவுத் துறை அமைச்சர், மாவட்டச் செயலர், மதுரை வடக்கு மற்றும் உசிலம்பட்டி எம்எல்ஏக்கள் ஆகியோர் பரிந்துரைத்துள்ளதாக பட்டியல் தாக்கல் செய்யப்பட்டு இருந்தது.

அழகப்பா பல்கலை., தொலைநிலைக்கல்வி மூலம் 2 ஆண்டு பி.எட்.,படிப்பு துவக்கம் : 500 மாணவர்கள் சேர்ந்தனர்

காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் தொலைநிலைக்கல்வி மூலம் 2 ஆண்டு பி.எட் பட்டப் படிப்புக்கான துவக்க விழா நடைபெற்றது. விழாவில் பல்கலைக்கழக துணைவேந்தர் பொறுப்புக்குழுத் தலைவர் பேராசிரியர் சோம.கலியமூர்த்தி தலைமை வகித்துப் பேசுகையில், 2 பி.எட் பட்டப் படிப்பு பெங்களூரில் உள்ள தேசிய ஆசிரியப் பயிற்சி நிறுவனத்தின் அனுமதியுடன் நடத்தப்படுகிறது.
தமிழ், ஆங்கிலம், கணிதம், இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல், நுண் உயிரியல், உயிர் நுட்பவியல், சூழ்நிலையியல், வரலாறு, புவியியல், கணினி அறிவியல், தகவல் தொழில்நுட்பவியல் ஆகிய பாடப்பிரிவுகளில் 500 மாணவர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த பி.எட் படிப்பில் சேர்ந்துள்ள தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் முதலில் தாங்கள் ஆசிரியர்கள் என்ற எண்ணத்தைக் கைவிட்டு மாணவர்களாக தங்களைக் கருதினால் மட்டுமே முழுமையாகப் பாடத்தை கற்க முடியும் என்றார்.
விழாவில் பல்கலை.யின் தனி அலுவலர் எச்.குருமல்லேஷ் பிரபு, ஆட்சிக்குழு உறுப்பினர் எஸ்.கருத்தபாண்டியன் ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.
பின்னர் நடைபெற்ற கருத்தரங்கில் மன்னர் திருமலைநாயக்கர் கல்லூரி இயக்குநர் ராஜா கோவிந்தசாமி ஆசிரியர்களுக்கான நன்னெறி என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார். தொலைநிலைக்கல்வி இயக்கக ஆசிரியர்கள், அதிகாரிகள், அலுவலர்கள் பலரும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

Wednesday 24 September 2014

அரசு பொதுத்தேர்வுகளில் தேர்ச்சி அதிகரிக்கும்! 'சிறப்பு வகுப்புகள் பயன்தரும்' என கல்வித்துறையினர் நம்பிக்கை

அரசு பள்ளிகளின் தேர்ச்சி விகிதத்தை அதிகரிப்பதற்காக, நடப்பாண்டின் துவக்கத்தில் பள்ளிக் கல்வித்துறை அறிவித்த, சிறப்பு வகுப்பு திட்டத்தின் மூலம், மாணவர்களின் தர மதிப்பீடு உயரும்; தேர்ச்சி சதவீதமும் அதிகரிக்கும்' என, கல்வித்துறையினர் எதிர்பார்க்கின்றனர்.
பொதுத்தேர்வுகளில், அரசு பள்ளி மாணவர்களின் தேர்ச்சி விகிதத்தை அதிகப்படுத்த, பள்ளிக் கல்வித்துறை புதுப்புது முயற்சிகளை கையாண்டு வருகிறது. 'ஆறு முதல் பிளஸ் ௨ வரை பயிலும் மாணவர்களுக்கு, நடப்பு கல்வியாண்டின் துவக்கத்திலிருந்தே, சிறப்பு வகுப்புகள் நடத்த வேண்டும்' என, ஜூன் மாதம் பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டது.அதன்படி, கோவை மாவட்டத்தில், 1090 ஆரம்பப்பள்ளிகள், 307 நடுநிலைப்பள்ளிகள், 185 உயர்நிலைப்பள்ளிகள் மற்றும் 306 மேல்நிலைப்பள்ளிகள் என மொத்தம், 1888 அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் நடத்தப்படுகின்றன. அனைத்து பள்ளிகளிலும், ஆறு முதல் பிளஸ் 2 வரையில் படிக்கும் மாணவர்களுக்கான பாட அட்டவணை, நேர திட்டமிடல் உள்ளிட்ட பணிகள், அந்தந்த பள்ளி ஆசிரியர்கள் மூலம் திட்டமிட்டு மேற்கொள்ளப்படுகின்றன. 'இந்த முயற்சியின் மூலம், நடப்பாண்டு பொதுத்தேர்வுகளில், அரசு பள்ளிகளின் தேர்ச்சி சதவீதம் கணிசமாக உயரும்' என, ஆசிரியர்கள் மற்றும் கல்வித்துறையினர் பெரும் எதிர்பார்ப்புடன் உள்ளனர்.
இது குறித்து ஒண்டிபுதுார் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியை பாக்கியம் கூறியதாவது: கல்வியில் பின்தங்கிய மாணவர்களுக்கு, முதல் பருவத்தேர்வு முடிந்ததும், சிறப்பு கவனம் செலுத்துவது வழக்கம். தற்போது அனைத்து மாணவர்களுக்கும், சிறப்பு வகுப்பு நடத்த அறிவிக்கப்பட்டுள்ள திட்டம் மிகவும் பயனுள்ளதாக உள்ளது.சிறப்பு வகுப்புகளில், ஆறு முதல் ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கு, மாலை 4.30 - 5.00 மணி வரையில், தனித்திறமையை வளர்த்துகொள்ளக் கூடிய செய்முறை, கையெழுத்து வகுப்புகள், குழு மேம்பாட்டு பயிற்சி உள்ளிட்டவை அளிக்கப்படுகின்றன.பத்து முதல் பிளஸ் 2 வரையிலுள்ள மாணவர்களுக்கு தினமும் காலை 8.30 முதல் - 9.30 மணி வரையும், மாலை 4.30 - 5.30 மணி வரையும், பாட வாரியாக வகுப்புகளும், தேர்வும் நடத்தப்படுகின்றன. எங்கள் பள்ளியில், பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு, மாலை நேர சிறப்பு வகுப்புகளில், 'ஸ்னாக்ஸ்' கூட வழங்குகிறோம். இத்தகைய முயற்சிகள் மூலம், மாணவர்கள் மத்தியில் பொதுத்தேர்வு பற்றிய பயத்தை போக்கி, 'அதிக மதிப்பெண் பெற முடியும்' என்ற நம்பிக்கையை ஏற்படுத்த முடிகிறது. இதன் மூலம், வரும் ஆண்டு அரசு பொதுத்தேர்வுகளில், தேர்ச்சி சதவீதம் கணிசமாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கறோம்.இவ்வாறு, அவர் கூறினார்.
மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஞானகவுரி கூறுகையில், ''சிறப்பு வகுப்புகள் திட்டத்தின் மூலம் மாணவர்களின் தரம், தற்போது நடக்கவிருக்கும் காலாண்டு தேர்வின் முடிவில் தெரியவரும். ஒவ்வொரு பள்ளி தலைமை ஆசிரியரும், சிறப்பு கவனம் செலுத்தி வருவதால் இத்திட்டம் பள்ளிகளின் தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்கும் என்ற எதிர்பார்ப்பு அனைவரிடத்திலும் எழுந்துள்ளது,'' என்றார்.

மத்திய அரசு ஊழியர்களுக்கு 'பயோ மெட்ரிக்' வருகைப் பதிவு முறை அமல்

மத்திய ஊழியர்களுக்கு, இந்த மாத இறுதிக்குள், 'பயோ மெட்ரிக்' வருகைப் பதிவு முறை, முழு அளவில் அமலாகும்,'' என, மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை செயலர் ராம் சேவக் சர்மா கூறினார்.
டில்லியில் நேற்று அவர் கூறியதாவது:மத்திய அரசு ஊழியர்களுக்கான, ஆதார் அடிப்படையிலான, பயோ மெட்ரிக் வருகைப் பதிவு முறையானது, இந்த மாத இறுதிக்குள் முழு அளவில் செயல்பாட்டிற்கு வரும். அதனால், இனி, தங்களின் வருகைப் பதிவு விபரங்களை, attendence.gov.in என்ற இணையதளம் மூலமாக, மத்திய அரசு ஊழியர்கள் பார்க்கலாம்.
மையப்படுத்தப்பட்ட மேலாண்மை முறை மூலம், இந்த வருகைப்பதிவு கையாளப்படும். மத்திய அரசு ஊழியர்கள், தங்களின் அலுவலகங்களில் உள்ள, பயோமெட்ரிக் கருவியில், தங்களின் விரல் ரேகையை பதிவு செய்து, தங்களின் அலுவலக வருகையை உறுதி செய்து கொள்ள வேண்டும்.இதன்மூலம், ஊழியர்கள் சரியான நேரத்திற்கும், ஒழுங்காகவும் பணிக்கு வருகின்றனரா என்பதை அறிந்து கொள்ளலாம்.தற்போது, பல்வேறு மத்திய அரசு அலுவலகங்களில், 1,816 பயோ மெட்ரிக் கருவிகள் செயல்
பாட்டில் உள்ளன. இவற்றின் மூலம், 43 ஆயிரம் பேர், தங்களின் வருகையை பதிவு செய்கின்றனர்.இவ்வாறு, ராம்சேவக் வர்மா கூறினார்.

மத்திய அரசு ஊழியர்களுக்கு 7 சதவீதம் டிஏ உயர்வு தமிழக அரசு ஊழியர்கள் ஏக்கம்


மத்திய அரசு ஊழியர்களுக்கு 7 சதவீதம் அகவிலைப்படி (டிஏ) உயர்த்தப்பட்டது போல தங்களுக்கும் உயர்த்தப்படுமா என தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் எதிர்பார்க்கின்றனர்.
மத்திய, மாநில அரசு ஊழியர்களுக்கு அடிப்படை சம்பளத்துடன், அகவிலைப்படியும் சேர்த்து வழங்கப்படுகிறது. இந்த அகவிலைப்படி ஒவ்வொரு 6 மாதங்களுக்கு ஒரு முறை உயர்த்தப்படுவது வழக்கம். ஜனவரி, ஜூலை ஆகிய மாதங்களில் அகவிலைப்படி உயர்வு அமல்படுத்தப்பட்டு வருகிறது.
கடந்த ஜனவரி மாதம் முதல் ஜூன் மாதம் வரையிலான 6 மாதங்களுக்கு 100 சதவீதம் அகவிலைப்படி வழங்கப்பட்டு வந்தது.
விலைவாசி உயர்வின் அடிப்படையில் அகவிலைப்படி மத்திய, மாநில அரசு ஊழியர்களுக்கு உயர்த்தப்படும். இதன்படி ஜூலை 1ம் தேதி முதல் மத்திய அரசு ஊழியர்களுக்கு வழங்கப்பட்டு வரும் அகவிலைப்படியை 7 சதவீதம் உயர்த்தி 107 சதவீதமாக மத்திய அரசு அதிகரித்தது.
இதற்கான அறிவிப்பு கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியானது. மத்திய அரசு அகவிலைப்படியை உயர்த்திய உடன் மாநில அரசு ஊழியர்களுக்கு அந்தந்த மாநில அரசுகள் அகவிலைப்படியை உயர்த்தி அறிவிக்கும்.
தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருந்ததால் மாநில அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு தொடர்பான அறிவிப்பு வெளியாகவில்லை. தற்போது உள்ளாட்சி தேர்தல் முடிந்து வெற்றி பெற்றவர்கள் விவரம் வெளியாகி விட்டது.
இதனால் தங்களுக்கு எப்போது அகவிலைப்படி உயர்த்தப்படும் என மாநில அரசு ஊழியர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. தற்போது மாத கடைசி என்பதால், இந்த மாத ஊதியத்துடன் அகவிலைப்படி உயர்த்தி வழங்கப்படுமா என அரசு ஊழியர்கள் எதிர்பார்க்கின்றனர்.
நவராத்திரி, தீபாவளி பண்டிகை என அடுத்தடுத்து பண்டிகை காலம் வருகிறது. எனவே தமிழகத்திலும் 7 சதவீதம் அகவிலைப்படியை உயர்த்தி இந்த மாத ஊதியத்துடன் வழங்கவும், அகவிலைப்படி நிலுவைத்தொகையை சேர்த்து வழங்கவும் தமிழக முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் எதிர்பார்க்கின்றனர்.

TET-உண்மை தன்மை அறியும் சான்றிதழ் வாங்க நீங்கள் எதுவும் செய்ய வேண்டியது இல்லை.

அனைத்தும் உங்கள் பள்ளி தலைமை ஆசிரியர் பார்த்து கொள்வார்.நீங்கள் உங்களுடைய பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் டூ மதிப்பெண் பட்டியல் மூன்று நகல்களை அவர்களிடம் ஒப்படையுங்கள். இளநிலை, முதுநிலை மற்றும் பி.எட். , பட்டத்திற்கான உண்மை தன்மை அறியும் சான்றிதழுக்கு விண்ணப்பிக்க வேண்டுமா?
1. சென்னை பல்கலைக்கழகத்தில் இளநிலை மற்றும் முதுநிலை பட்டத்திற்கு உண்மை தன்மை அறியும் சான்றிதழுக்கு விண்ணப்பிக்க கட்டணம் செலுத்த வேண்டியதில்லை. மற்ற பல்கலைக்கழகங்கள் கட்டணம் பெறுகின்றன. அதுவும் அரசு பள்ளி ஆசிரியர் என்றால் அதற்கு கட்டணம் குறைவு. விண்ணப்பிக்கும் போது பள்ளி தலைமை ஆசிரியர் அளிக்கும் கடிதம், உங்கள் பட்ட சான்றிதழின் நகல் இரண்டையும் சேர்த்து பதிவு தபாலில் அனுப்பி வைக்க வேண்டும்.
2. பி.எட்., பட்டத்திற்கு உண்மை தன்மை அறியும் சான்றிதழுக்கு விண்ணப்பிக்கும் போது உங்கள் பள்ளி தலைமை ஆசிரியர் தரும் கடிதம், உங்கள் பி.எட் மதிப்பெண் பட்டியல், புராவிசனல் சர்ட்டிபிகேட் மற்றும் பட்டம் மூன்றின் நகலையும் அனுப்ப வேண்டும்.
உண்மை தன்மை சான்றிதழுக்கு விண்ணப்பிக்கும் முன்பு நீங்கள் படித்த பல்கலைக்கழகத்திற்கு போன் செய்து உரிய கட்டணம் பற்றிய தகவல் அறிந்து பின்னர் விண்ணப்பிங்கள்.

தகவல் பெறும் உரிமை சட்டத்தின் கீழ் விண்ணப்பம் செய்பவர்கள், தகவல் கோரும் காரணத்தை கூற தேவை இல்லை


தகவல் பெறும் உரிமை சட்டத்தின் கீழ் விண்ணப்பம் செய்பவர்கள், அந்த தகவல் எந்த காரணத்துக்காக கேட்கப்படுகிறது என்பதை தெரிவிக்க வேண்டும் என்ற தீர்ப்பை சென்னை ஐகோர்ட்டு தாமாக முன்வந்து மாற்றி அமைத்து தீர்ப்பு வழங்கியுள்ளது.
காரணம் தெரிவிக்க வேண்டும்
புதுச்சேரியை சேர்ந்த பி.பாரதி என்பவர் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேட்ட தகவல்களை வழங்கும்படி சென்னை ஐகோர்ட்டு நிர்வாகப் பதிவாளருக்கு மத்திய தகவல் உரிமை ஆணையம் உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து, சென்னை ஐகோர்ட்டில், நிர்வாகப்பதிவாளர் வி.விஜயன் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் என்.பால்வசந்தகுமார், கே.ரவிசந்திரபாபு ஆகியோர் கடந்த 17-ந் தேதி பிறப்பித்த உத்தரவில், ‘தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் விண்ணப்பம் செய்பவர்கள், அந்த தகவல் எதற்காக பெறப்படுகிறது என்ற குறைந்தபட்ச காரணத்தை தெரிவிக்கவேண்டும்’ என்று கூறியிருந்தனர். மேலும், தகவல் பெறும் உரிமை சட்டத்தை தவறான காரணத்துக்கு பயன்படுத்துவதை தடுக்க வேண்டும் என்று கூறி மத்திய தகவல் ஆணையத்தின் உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டனர்.
காரணம் தேவையில்லை
இந்த நிலையில், இந்த தீர்ப்பை மறுஆய்வு செய்வதற்கு நீதிபதிகள் தாமாக முன்வந்து முடிவு செய்தனர். பின்னர், அந்த தீர்ப்பை ஆய்வு செய்வதற்காக, வழக்கை மீண்டும் விசாரணைக்கு பட்டியலிடும்படி ஐகோர்ட்டு பதிவுத்துறைக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இதன்படி, இந்த வழக்கின் தீர்ப்பை மறுஆய்வு செய்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:-
தகவல் பெறும் உரிமை சட்டத்தின் கீழ் தகவல் கேட்டு விண்ணப்பம் செய்பவர்கள், அந்த தகவல் எதற்காக பெறப்படுகிறது என்ற காரணத்தை கூற தேவையில்லை என்று தகவல் பெறும் உரிமை சட்டத்தின் பிரிவு 6(2) கூறுகிறது.
ஆனால், இந்த சட்டப்பிரிவை கவனிக்காமல், கடந்த 17-ந் தேதி நாங்கள் பிறப்பித்த தீர்ப்பில், ‘தகவல் பெறுபவர்கள் எதற்காக அந்த தகவல் பெறப்படுகிறது என்ற குறைந்தபட்ச காரணத்தை கூறவேண்டும்’ என்று குறிப்பிட்டு இருந்தோம்.
நீக்கம்
எங்களது அந்த கருத்து, தகவல் பெறும் உரிமை சட்டத்துக்கு எதிராக உள்ளது. எனவே, எங்களது தீர்ப்பில், தகவல் பெறுபவர், தகவல் எதற்காக பெறப்படுகிறது என்ற காரணத்தை கூறவேண்டும் என்ற வரிகளை ரத்து செய்து, தீர்ப்பை மாற்றி அமைக்கிறோம். இந்த கருத்தை நீக்கிய புதிய தீர்ப்பு நகலை வெளியிடும்படி, ஐகோர்ட்டு பதிவுத்துறைக்கு உத்தரவிடுகிறோம். இவ்வாறு நீதிபதிகள் கூறியுள்ளனர்

CPS -ACCOUNT SLIP for Elementry Education.

ஊராட்சிஒன்றிய /நிதியுதவி/நகராட்சி பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர் மற்றும் ஆசிரியரல்லாத பணியாளர்களின் C.P.S-கணக்குத்தாள்கள்-2009-10-முதல் 2012-2013 வரை மாவட்ட கருவூல அலுவலர் அவர்களுக்கும், சென்னை தொடக்கக்கல்வி இயக்ககத்துக்கும் அனுப்பப்பட்டுள்ளன
விரைவில் சம்பளம் பெற்று வழங்கும் அலுவலர்கள் பெற்று சம்மந்தப்பட்ட பணியாளர்களுக்கு வழங்கப்படும்